ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ 🙂
ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான நிரலாக மாற்றிக் காட்டும் ஈமேக்ஸ்.
- Indentation அறவே இல்லாத ஒரு நிரலை ஈமேக்ஸில் திறக்கவும்.
- C–x அழுத்தியபின் h அழுத்தவும்.
- C–M– அழுத்தவும்.
உங்கள் நிரல் எவ்வளவு நேர்த்தியாக சீரமைக்கபட்டுவிட்டது! ஆம் இதெல்லாம் ஈமேக்ஸ்கு ஜுஜூபி 😀 சரி வாருங்கள் மேலும் சில கட்டளைகள் பயில்வோம்.
பல கோப்புகளைக் கையாளுதல்
பல கோப்புகளை ஒரே நேரத்தில் கையாளுவது பல சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பிலிருந்து உரையை நகலெடுத்து இன்னொரு கோப்பில் இடலாம். வலை உலாவிகளில் பல tab-களைப் பயன்படுத்துவது போலத்தான். vi பயன்படுத்திப் பழகியோருக்கு இது புதுமையாக இருக்கலாம். 😛
முதல் கோப்பைத் (sample1 என்று வைத்துக் கொள்வோம்) திறந்தபின் இன்னொரு கோப்பையும் (sample2 என்று வைத்துக் கொள்வோம்) அதேபோலத் (C–x C–f) திறக்கவும். இப்போது sample1 sample2-ன் வலப்பக்கத்தில் இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள். அதாவது திறக்கப்படும் ஒவ்வொரு புதிய கோப்பும் தற்போதைய கோப்பின் இடப்பக்கத்தில் திறப்பதுபோல் வைத்துக்கொள்ளலாம். இப்போது sample1-ற்குச் செல்ல C–x அழுத்தி வலது அம்புக்குறியை அழுத்தவும். அதேபோல் மீண்டும் sample2-ற்குச் செல்ல C–x <இடது அம்புக்குறி>.
இப்படிப் புதிய கோப்புகளைத் திறந்துகொண்டே போனால் ஒரு கட்டத்தில் தேவையான கோப்பிற்குச் செல்வது தலைவலியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். நூறு கோப்புகளைத் திறந்தாலும் தேவையான கோப்பிற்குச் செல்ல எளிமையான வழி உள்ளது. C–x அழுத்தி b அழுத்தவும். இப்போது நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும் (இதை mini-buffer எள்று சொல்வதுண்டு). அங்கே தேவையன கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்தவும்.
திறக்கப்படிருக்கும் அனைத்துக் கோப்புகளின் பெயர்களையும் பட்டியலிட C–x C–b.
மீளமைத்தல் (undo)
உரைதிருத்தும் போது மீளமைத்தல் என்பது பலருக்கு முக்கியமான தேவை. இதற்கு C–x u பயன்படுத்தலாம். C–_ என்பதும் இதே வேலையைச் செய்யும்.
தேடுதலும் மாற்றுதலும் (Search and replace)
குறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்றொடரைத் தேட C–s அல்லதி C–r பயன்படுத்தலாம். C–s நிலைகாட்டி இருக்கும் இடத்தில் தொடங்கி முன் நோக்கித் தேடும், C–x பின் நோக்கித் தேடும்.
Regular expressions கொண்டும் தேடலாம். முன்நோக்கித் தேட C–M–s, பின்நோக்கித் தேட C–M–r.
அதேபோல் ஒரு சொற்றொடரைத் தேடி அதற்குப் பதிலாய் வேறொரு சொற்றொடரை இட, C–% அழுத்தவும். Minibuffer-ல் தேடவேண்டிய சொற்றொடரை இட்டு <Enter> அழுத்தவும். பின்னர் புதிய சொற்றொடரை இடவும். இதேபோல் regular expression கொண்டு replace செய்ய C–M–% பயன்படுத்தலாம்.
இப்போது எங்கெல்லாம் replace செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம்.
குறியீடு | பொருள் |
! | அனைத்து இடங்களிலும் மாற்ற |
, | தற்போது காட்டப்படும் இடத்தில் மட்டும் மாற்ற |
y | தற்போது காட்டப்படும் இடத்தில் மாற்றி அடுத்த இடத்திற்குச் செல்ல |
n | அடுத்த இடத்திற்குச் செல்ல |
q | எதையும் மாற்றாமல் விட |