Monthly Archives: April 2011

மனிதருள் மாணிக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதும் வலைப்பதிவு… எழுதத் தூண்டியது நேற்று மாலை நடந்த ஒரு பாராட்டுவிழா…

எங்கள் கல்லூரி (எம்.ஐ.டி)யின் விடுதிப் பொறுப்பாளர்(hostel warden) திரு.ஜோதிலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாங்கள் (இங்குள்ள சில மாணவர் சங்கங்கள்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. அவர் பொறுப்பேற்றபின் கடந்த 2 ஆண்டுகளில் எம்.ஐ.டி விடுதிகள் கண்ட மாற்றங்கள் ‘சிவாஜி’ படத்தில் சூப்பர் ஸ்டார் செய்வது போன்றவை. இது சற்று மிகையாகத் தெரியலாம், ஆனால் இங்குள்ள மாணவர்களுக்கு இதன் உண்மை நன்றாகத் தெரியும்.

அனைத்து மாற்றங்களையும் பட்டியலிட்டால் அதற்கு மட்டும் தனியே ஓர் இணையதளமே உருவாக்கலாம். நான் கூறவந்தது அதுவல்ல; இன்று பாராட்டுவிழாவின்போது நான் மனம் நெகிழ்ந்த சில மணித்துளிகள்…

அது தனக்கான பாராட்டுவிழா என்பது விழா நடந்த இடத்திற்கு வரும் வரை அவருக்குத் தெரியாது. அங்கிருந்த ஏற்பாடுகளைக் கண்டதும் அதனைப் புரிந்துகொண்ட அவர் இரண்டு கட்டளைகள் இட்டார்: 1) நான் ஏதும் பேசமாட்டேன் 2) ஏதும் வாங்கிக் கொள்ளமாட்டேன். “விழாவே அதற்காகத்தானே” என்றவாறு சரவணன் அறிமுகவுரை கொடுத்துவிட்டு அமர, அனைவரும் தங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும் தாங்கள் சார்ந்த மாணவர் சங்கத்திற்கும் அவர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்து நன்றிகளைத் தெரிவித்தனர்.

பின்னர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர் கல்லூரியில் சேர்ந்தது முதலே மாணவர்கள் நலனுக்காக நேரம் காலம் பாராமல் பணியாற்றியது அறிந்து வியந்தேன். இவை அனைத்தும் முடிந்தவுடன் விழாநாயகர் பேச ஆரம்பித்தார். (அவரது பேச்சு மேடைக்காகவோ தன்னடக்கத்தைக் காட்டுவதற்காகவோ அல்ல; அவரது மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.)

அவரது பேச்சு…

“நான் இத்தனை பாராட்டுகளுக்கு உண்மையில் தகுதியுடையவன்தானா என்று எண்ணிப்பார்க்கிறேன். நான் சும்மா ஐடியாதான் கொடுக்கிறேன், நீங்கதான் அதை நடத்திக் காட்டுறீங்க” என்று பாராட்டுக்களைத் திசைதிருப்பிவிட்டுத் தொடர்ந்தார்.

“பல்வேறு தனியார் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள வசதிகளைக் காணும்போது இதுபோல் எம்.ஐ.டி யில் 10 சதவீதம் கூட இல்லையே என்று எண்ணியதுண்டு. எனக்கு வாய்ப்புக் கிடைத்ததும் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன் அவ்வளவுதான்” என்று வெகு இயல்பாய்ச் சொல்லிவிட்டார்.

அவர் செய்துள்ள மாற்றங்களே மலையாய்த் தெரிந்தன எங்களுக்கு. அவற்றை நிறைவேற்ற அவர் கடந்து வந்த பாதைகளையும் சந்தித்த இடர்ப்பாடுளையும் அவற்றை அவர் சாதுர்யமாய்க் கையாண்ட விதத்தையும் அறிந்தபின் அவை இமயமாய் உயர்ந்தன. இதுமட்டுமல்ல, “இன்னும் நிலுவையில் பல வேலைகள் இருக்கின்றன. என் பதவிக்காலம் முடிவதற்குள் அவை அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று தீர்மானத்தோடு சொன்னார்.

இறுதியாய் அவருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினோம். அந்தப் பொன்னாடையை இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவனுக்கே அணிவித்துவிட்டதும் அவன் கண்ணீரே விட்டுவிட்டான். “நான் வீட்டில் குறைந்தபட்சப் பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புபவன்” என்று கூறிவிட்டு, கொடுத்த பரிசுகளை மாணவர் சங்கங்களுக்கே (PDA, Computer Society) கொடுத்துவிட்டார்.

இத்தகைய மனிதருடன் பழகும் வாய்ப்பு இத்தனை நாட்களாய்க் கிடைக்கவில்லையே என்று சற்று ஏங்கித்தான் போனேன்.

மாணவர்கள் செயல்முறைப் பணித்திட்டங்களில் (projects) பங்குகொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு Computer Society-ன் சார்பில் ஒரு Students Activity Centre அமைக்க இடம் கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு வருடம் போராடியும் இன்னும் கிடைத்தபாடில்லை. “நிச்சயம் நம்ம வார்டன் சார் ஏதாவது வழி சொல்லுவார்” என்ற நம்பிக்கையோடு அவர் அறைக்குச் சென்று தேவையைக் கூறினேன். உடனே ஒரு பட்டியலை எடுத்துக் காட்டி “இவைதான் நாளைமறுநாள் துணைவேந்தரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ள பட்டியல். உங்களது தேவையையும் இதில் இணைத்துப் புதிய பட்டியல் தயார் செய்து வைக்கிறேன். நாளை வந்து நீ சரிபார்த்துவிடு. உடனே அனுப்பி ஒப்புதல் வாங்கிடலாம்” என்று உறுதியாகச் சொன்னார். இத்தனை நாட்களாய் இவரை அணுகாமல் விட்டதை எண்ணி வெட்கப்படுகிறேன்.