Monthly Archives: September 2010

வீடு தேடி வந்த பேசும் குப்பை

இன்று காலை என் அறைக்கு வந்த நண்பன் ஒருவன் “இன்னைக்கு ஹிந்து பேப்பரைப் பார்த்தியா?” என்று ஆர்வமாய்க் கேட்டான் என் அறைவாசியிடம் (roommate ;-)). “இல்லை” என்றதும் வேக வேகமாய் அந்த நாளிதழை எடுத்து எதையோ தேடினான். “இதோ இங்க இருக்கு!” என்று உற்சாகமாய் ஒரு பக்கத்தைக் காட்டினான். செய்தித்தாளுடன் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய கருப்புப் பெட்டியிலிருந்து ஏதோ புரியாத ஒலி கேட்டது. உற்று கவனித்தால், அது வோல்க்ஸ்வேகன் (Volkswagen) கார் விளம்பரம். ஆம், செய்தித்தாளிலே பேசும் விளம்பரம்!!

விளம்பரத்தின் புகைப்படம்

விளம்பரத்தின் புகைப்படம்

“அடப்பாவிகளா! இதுக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?!!” என்று எண்ணியபோது “பொருளின் உற்பத்திச் செலவை விட அதற்கான விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்கின்றன கிட்டத்தட்ட எல்லா முன்னனி நிறுவனங்களும்!” என்ற கட்டுரையைப் பல நாட்களுக்கு முன் ஒரு வார இதழில் படித்தது நினைவுக்கு வந்தது. நண்பர்கள் அதை “செமயா இருக்கு” என்று ரசித்த போதும் என்னால் முடியவில்லை.

இந்த விளம்பரத்தால் யாருக்கு என்ன பலன்? இதைப்பார்த்து யாராவது இந்தக் காரை வாங்கிவிடப்போகிறார்களா??

நாளிதழில் அந்தப் பக்கத்தைக் திறந்தாலே பதிவு செய்யப்ட்ட வசனத்தைப் பேச ஆரம்பித்துவிடுகிறது அந்த வாயில்லா ஜீவன். முதல் முறை கேட்க ஏதோ வித்தியாசமாக இருந்தாலும் பேப்பரைத் திறக்கும்போதெல்லாம் ஒலி எழுப்புவது எரிச்சலா இல்ல? இது ஓர் அத்துமீறல் அல்லவா? அதுமட்டுமல்ல, இன்று இத்தனை வீடுகளைச் சென்றடைந்த இந்த மின்னனு சாதனம் நாளை எங்கே போகப் போகின்றது? நிச்சயம் குப்பைக்குத்தான்! ஏற்கனவே சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கிடக்கும் இந்தச் சமயத்தில் இப்படியொரு மின்கழிவினைப் பெருமளவில் உற்பத்தி செய்து நம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறது ஒரு தனியார் நிறுவனம், அதற்கு உடந்தை பல முன்னனி நாளிதழ்கள்!!

என்ன கொடுமை சார் இது??!! 🙁

மென்பொருள் விடுதலை நாள்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை கொண்டாடப்படும் மென்பொருள் உலகின் சுதந்திர தினம். பயனருக்கு மென்பொருளை எப்பொருட்டும் பயன்படுத்த, மாற்றியமைக்க, பகிர்ந்துகொள்ள மற்றும் மாற்றியமைத்த மென்பொருளைப் பகிர்ந்துகொள்ள உரிமை வழங்கும் கட்டற்ற மென்பொருட்களின் முன்னோடியான ஈமேக்ஸ் வெளியிடப்பட்டதைக் குறிக்கும் மென்பொருள் விடுதலை நாள் உலகெங்கிலும் நேற்று (செப் 18, 2010) கொண்டாடப்பட்டது.

சென்னை லினக்ஸ் பயனர் குழு இவ்விழாவினை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கட்டற்ற இயங்குதளம் நிறுவுவது தொடங்கிப் பல்வேறு தலைப்புகளில் 32 கடைகள் அமைக்கப்பட்டுப் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையாளர்களுக்குச் செய்முறை விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் வல்லுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுக் கடைகளைப் பார்வையிட்டனர். கட்டற்ற மென்பொருள் பயனர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் கல்லூரி மாணவர்கள் 7 கடைகள் அமைத்திருந்தோம். நான் பங்குகொண்ட கட்டற்ற இயங்குதளம் நிறுவுதல் கடை எப்பொழுதும் போல நேற்றும் மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்திய விமானப்படையில் ரெட்ஹேட் (RedHat) லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவதாகப் பார்வையாளர் ஒருவர் (விமானப்படையில் பணியாற்றுபவர்) மூலம் அறிந்து மகிழ்ந்தேன். அவர் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் எங்கள் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.

விழா முடிவில் சிறப்பான கடைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நான்கு பரிசுகளுள் மூன்றனை நாங்கள் வென்றோம் 🙂 ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள்.

வணக்கம் :-)

எனது நீண்ட நாள் கனவு… இந்த வலைப்பதிவு உலகில் கால்தடம் பதிக்கவில்லையென்றாலும் காலடி எடுத்தாவது வைக்க வேண்டுமென்று. “சே! இதை நம்ம வலைப்பதிவில போட்டா நல்லா இருக்கும்ல…” என்று பல முறை நினைத்ததுண்டு.

இன்னைக்கு கண்டிப்பா அதை நிறைவேற்றியே ஆகனும்னு ஒரு உறுதில உருவாக்கிட்டேன். தொடர்ந்து பதிவுகள் செய்யனும்….