மென்பொருள் விடுதலை நாள்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை கொண்டாடப்படும் மென்பொருள் உலகின் சுதந்திர தினம். பயனருக்கு மென்பொருளை எப்பொருட்டும் பயன்படுத்த, மாற்றியமைக்க, பகிர்ந்துகொள்ள மற்றும் மாற்றியமைத்த மென்பொருளைப் பகிர்ந்துகொள்ள உரிமை வழங்கும் கட்டற்ற மென்பொருட்களின் முன்னோடியான ஈமேக்ஸ் வெளியிடப்பட்டதைக் குறிக்கும் மென்பொருள் விடுதலை நாள் உலகெங்கிலும் நேற்று (செப் 18, 2010) கொண்டாடப்பட்டது.

சென்னை லினக்ஸ் பயனர் குழு இவ்விழாவினை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கட்டற்ற இயங்குதளம் நிறுவுவது தொடங்கிப் பல்வேறு தலைப்புகளில் 32 கடைகள் அமைக்கப்பட்டுப் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையாளர்களுக்குச் செய்முறை விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் வல்லுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுக் கடைகளைப் பார்வையிட்டனர். கட்டற்ற மென்பொருள் பயனர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் கல்லூரி மாணவர்கள் 7 கடைகள் அமைத்திருந்தோம். நான் பங்குகொண்ட கட்டற்ற இயங்குதளம் நிறுவுதல் கடை எப்பொழுதும் போல நேற்றும் மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்திய விமானப்படையில் ரெட்ஹேட் (RedHat) லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவதாகப் பார்வையாளர் ஒருவர் (விமானப்படையில் பணியாற்றுபவர்) மூலம் அறிந்து மகிழ்ந்தேன். அவர் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் எங்கள் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.

விழா முடிவில் சிறப்பான கடைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நான்கு பரிசுகளுள் மூன்றனை நாங்கள் வென்றோம் 🙂 ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள்.

Leave a Reply